தொழிலதிபர் கொலை வழக்கு இரு வாலிபர்கள் கைது பணத்தை திருப்பி கொடுக்காததால் வெறிச்செயல்

By தினமலர்

தொழிலதிபர் கொலை வழக்கு இரு வாலிபர்கள் கைது பணத்தை திருப்பி கொடுக்காததால் வெறிச்செயல்
WhatsApp Facebook

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் தொழிலதிபர் கண்ணன் 58, வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் வெங்கடேஷ் 30, சூர்யா இசக்கி, 27, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் கண்ணன், திருமண மண்டபம் நடத்தி வந்தார். கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெருவில் உள்ள டியூஷன் மையத்தில் இவரது மகள் படிக்கிறார் கண்ணன் தினமும் மாலை மகளை டியூஷனில் விடுவதும், இரவில் அழைத்து வருவதும் வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் டியூஷன் சென்டர் வாசலில் டூவீலருடன் நின்றிருந்த அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டியூஷன் முடிந்து வெளியே வந்த மகளின் கண் முன் தந்தை வெட்டிக் கொல்லப்பட்டார். மாவட்ட எஸ்.பி., விஷ்வேஷ் சாஸ்திரி நேரில் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து இந்த கொலையில் ஈடுபட்ட வெங்கடேஷ், சூர்யா இசக்கி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கண்ணனும் வெங்கடேசும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். கண்ணன் தொழில் செய்வதற்காக வெங்கடேஷ் தனது குடும்ப நகையை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை கண்ணன் திருப்பி கொடுக்காததால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

வெங்கடேஷ் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில், அவர் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார்.

பணம் கொடுக்காமல் கண்ணன் காலம் தாழ்த்தியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில், நண்பர்கள் உதவியுடன் கண்ணனை வெங்கடேஷ் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.