வாஷிங்டன்: உக்ரைன்-ரஷ்யா போர் தான் உலகின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் ராணுவம் , ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் முக்கிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, டீசல் ஏற்றுமதிக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் டீசல் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
தற்போது ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகளைத் தாக்கப் போவதில்லை என உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. ரஷ்யாவும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டுள்ளது; உலகின் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் ரஷ்யா-உக்ரைன் போர்தான், ஈரான் அல்ல; ஈரான் அணு ஆயுதம் ஏந்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
விரைவாக ஒரு ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளுமா என்பதை நான் தீர்மானிப்பேன்; நாங்கள் ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறோம். ஈரான் போரில் அமெரிக்காவிற்கு உதவாத நாடுகள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு செல்கிறது.
அமெரிக்காவிற்கு உதவி செய்ய வேண்டும். நாம் நமக்காகச் செய்வதை விட, மற்றவர்களுக்காகவே இதை அதிகமாகச் செய்கிறோம்; தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்து வருகிறோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
