ஸ்வெரேவ் புதிய சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் அசத்தல்

By நமது சிறப்பு நிருபர்

ஸ்வெரேவ் புதிய சாம்பியன்: யு.எஸ்., ஓபன் டென்னிசில் அசத்தல்

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

WhatsApp Facebook

UPDATED : செப் 14, 2026 10:56 PM ADDED : செப் 14, 2026 10:54 PM

நியூயார்க்:யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், அமெரிக்காவின் ஷெல்டனை வென்றார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 29, அமெரிக்காவின் பென் ஷெல்டன் 23, மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இருவரும் மாறி, மாறி 'கேம்' வெல்ல, 6-6 என 'டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் ஸ்வெரேவ் 7-6 என வென்றார். தொடர்ந்து போராடிய ஷெல்டன், மூன்றாவது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார். நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட ஸ்வெரேவ், 6-2 என மிகச் சுலபமாக வென்றார்.

மூன்று மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 7-6, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதல் முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆனது. ஏற்கனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் தனது 26வது பட்டத்தை கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

நழுவிய வாய்ப்பு: இதன்மூலம் 2003க்கு பின் யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற அமெரிக்க வீரர் என்ற ஷெல்டனின் கனவு தகர்ந்தது. கடந்த 2003ல் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர, ஆர்தர் ஆஷுக்கு (1968) பின் யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற அமெரிக்க கறுப்பின வீரர் என்ற வாய்ப்பும் நழுவியது.

யு.எஸ்., ஓபன் பைனலில் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு கோப்பையுடன், ரூ. 52.56 கோடி பரிசு கிடைத்தது. ஷெல்டனுக்கு ரூ. 26.76 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், முறையே 'டாப்-3' இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

யு.எஸ்., ஓபனில் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டன், 9வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். இத்தொடரில் முதல் சுற்றோடு திரும்பிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்ற ஸ்வெரேவ் கூறுகையில், ''பைனலில் ரசிகர்களின் ஆதரவு ஷெல்டனுக்கு அதிக அளவு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. இது, எங்கள் அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. என்னை சிறந்த வீரராக கருதவில்லை. ஏனெனில் ஜானிக் சின்னர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்) முழுஉடற்தகுதியுடன் இருந்திருந்தால் என்னை அப்படி சொல்ல முடியாது. இருப்பினும் இந்த ஆண்டு எனக்கு ராசியானதாக அமைந்தது,'' என்றார்.

கடந்த 2020ல் நடந்த யு.எஸ்., ஓபன் பைனலில் ஸ்வெரேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் தோல்வியைடந்தார். அப்போது நழுவவிட்ட கோப்பையை, 6 ஆண்டுகளுக்கு பின் தட்டிச் சென்றார் ஸ்வெரேவ்.

யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் கோப்பை வென்ற 2வது ஜெர்மனி வீரரானார் ஸ்வெரேவ். இதற்கு முன், 1989ல் மேற்கு ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.